தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பூமிக்கு அடியில் மின்கம்பிகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை, பிப். 14: தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பூமிக்கு அடியில் மின்கம்பிகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கூறினார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசும்போது, “சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக குடியிருப்புகள் உள்ளன. குறைவான மின்அழுத்தம் உள்ள  பகுதியாக உள்ளது. துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். குடியிருப்புக்கு மேல் உள்ள மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைவடங்களாக மாற்றி அமைக்க வேண்டும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட  பகுதிகளிலும் இதே பிரச்னை உள்ளது. இதை செய்து தர அரசு முன்வருமா?” என்றார்.மின்துறை அமைச்சர் தங்கமணி: சோழிங்கநல்லூர் தொகுதி மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இதே பிரச்னைகள் உள்ளன. வீடு கட்டும்போது ஆபத்து தெரியாமல் கட்டிவிடுகின்றனர்.  அதன்பிறகு ஆபத்து என்கிறார்கள். சென்னை முழுவதும் 13,500 கிலோ மீட்டர் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் புதைவடங்களாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் 6000 கிலோ மீட்டர் பணி முடிவடைந்து விட்டது.  இன்னும் 6,500 கி.மீ. தூரம் பணிகள் நடைபெற வேண்டும். சில காரணங்களுக்காக 2 ஆண்டுகளாக வழக்கு இருந்ததால் பணிகள் தாமதம் இருந்தது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா (திமுக): தாம்பரம், சென்னை ஒட்டியுள்ள பெரிய நகரம். சென்னையின் நுழைவாயிலாக இருக்கிற நகரம் ஆகும். மக்கள், வியாபாரிகள் அதிகம் உள்ளனர். தாம்பரத்தில் இருந்து தினசரி 7 முதல் 8 லட்சம்  பேர் பஸ், ரயில் நிலையங்களுக்கு வந்து செல்கிறார்கள். எனவே இந்த பகுதிகளில் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைக்காமல் இருப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆகவே, உடனடியாக தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கு அடியில் மாற்றித் தர வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: தாம்பரம் டிவிஷனில் மட்டும் 1,230 கி.மீ. அளவிற்கு புதைவடங்கள் போட வேண்டியிருக்கிறது. அதற்கு இப்போது ரூ.443 கோடி அளவிற்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. டெண்டர் பணிகள்  முடிவடைந்தவுடன் மின்கம்பிகள் பூமிக்கு அடியில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: எனது தொகுதியான கொளத்தூரிலும் பூமிக்கு அடியில் மின்கம்பிகள் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த அவையில் பலமுறை வலியுறுத்தினேன். ஒவ்வொரு முறையும் அமைச்சர் ஒரு  காரணத்தை கொல்லி வருகிறார். மீண்டும் இந்த அவையில் கோரிக்கை வைக்காத சூழ்நிலையை ஏற்படுத்தி அந்த பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும். நான் மேயராக இருந்தபோது அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 15 நாள் அல்லது 1 மாதத்திற்கு ஒருமுறை கூடி பேசி இதுபோன்ற பணிகளை முடிக்க வழிவகை செய்தனர். இந்த முறை பின்பற்ற அரசு முன்வருமா?அமைச்சர் தங்கமணி: கொளத்தூர் தொகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்ததால் பிரச்னை எழுப்புகிறார். நியாயமான கோரிக்கைதான். தற்போது சாலையை வெட்டாமல் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைக்க புதிய  வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்காகன டெண்டர் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதும், கொளத்தூர் மட்டுமல்ல சென்னை முழுவதும் பூமிக்கு அடியில் மின் கம்பிகள்  அமைக்கும் பணி நடைபெறும். கொளத்தூர் தொகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் இனியும் கேட்காத அளவிற்கு பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: