வேலை கிடைக்காததால் மனநலம் பாதிப்பு பீகார் வாலிபர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

பல்லாவரம், பிப். 14: பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்தவர் இந்தல் (29).  திருமணமானவர். கடந்த 2014ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர். அதன் பின்னர் மாயமானார். அவருடன் வேலைக்கு வந்த நண்பர்கள் இவரை தேடியும் கிடைக்கவில்லை.

 எனவே, அவர் சொந்த ஊருக்கு சென்றிருப்பார் என நினைத்தனர். இதற்கிடையே இந்தல் சொந்த ஊருக்கு செல்லாததால் அவரை காணாமல் குடும்பத்தினர் சென்னையில் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 2015 ஆகஸ்டு மாதம் சென்னை திரிசூலம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அரைநிர்வாணமாக, இந்தல் சுற்றி திரிந்துள்ளார். பல்லாவரம் போலீசார் இந்தலை பிடித்து  ஆடை கொடுத்து திரிசூலத்தில் உள்ள மனசு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு  அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  இதனால் இந்தல் படிப்படியாக குணம் அடைந்து, மற்றவர்களுடன் பேசும் நிலைக்கு வந்தார். இந்நிலையில் தன்னுடைய முகவரியை தெரிவித்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என மனசு மனநல காப்பக இயக்குநர் சூசை ஆண்டனியிடம் கூறினார். உடனே, பீகார் போலீசார் மூலம் முகவரியை கண்டுபிடிக்க முயன்றும் தோல்வியில் முடிந்தது. இந்தல் வசித்த பகுதியின் பஞ்சாயத்து தலைவர் மூலம் அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார்.

 இதற்கிடையே, 5 ஆண்டுகளாக கணவர் காணாமல் போனதால் மறு திருமணம் செய்ய இந்தலின் மனைவி குடும்பத்தினர் முடிவு செய்து திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை கேட்டுள்ளனர். இந்நிலையில், இந்தல் நல்லபடியாக சென்னையில் உள்ளார் என்ற தகவலை அவரது உறவினர்கள் இந்தல் மனைவியிடம் தெரிவித்தனர். அவர் ஆனந்த கண்ணீர் வடித்து, தன் கணவனுடன் தான் வாழ்வேன். அவரை அழைத்து வாருங்கள் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று சென்னை திரிசூலம் மனசு மனநல காப்பகத்திற்கு வந்த இந்தலின் தந்தை அருண் பிரசாத் மற்றும் உறவினர்கள் மனசு மனநல காப்பக இயக்குநர் சூசை ஆண்டனி மற்றும் பணியாளர்களுக்கு நன்றி கூறி தன் மகனை அழைத்து சென்றனர்.

Related Stories: