மாநகர் பகுதியில் தரமான ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், பிப். 13: திருப்பூர், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தார் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  திருப்பூர் மாநகரப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனியன் தொழிற்சாலைகள், பாத்திர கடைகள்,சாயப்பட்டறை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், பணியாற்றக்கூடிய உழியர்கள், பொது மக்கள் வந்து செல்ல மாநகரப்பகுதியில் போதுமான கட்டமைப்புகள் மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. அதன்படி, திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் சிக்னல் அருகில் தார் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. ஆகையால், அப்பகுதியில் பேரிகார்டு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் மாநகரப்பகுதியில் போடப்படும் ரோடுகள், தேசிய நெடுஞ்சாலை ரோட்டிற்கு இணையாக அமைக்க வேண்டும். அப்போது தான் லோடுகளை ஏற்றி செல்லும் லாரிகளால், ரோடு பழுதடைவதை தடுக்க முடியும்.

 இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகரப்பகுதியில் உள்ள பிரதான ரோடுகள், வீதிகளை இணைக்கும் ரோடுகள், ஊராட்சிகளுக்கு செல்லக்கூடிய ரோடுகள் போடப்பட்டு ஒரு மாத காலத்தில் மிகவும் பழுதடைந்து விடுகிறது. ஏற்கனவே, திருப்பூர் மாநகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில்,இவ்வாறு ரோடுகள் அடிக்கடி பழுதடைவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது. இதில் ரோடுகளின் நடுவில் ஏற்படக்கூடிய குழிகளினால் விபத்துகளும் அதிகரித்துள்ளது. ஆகையால், இனிவரும் காலங்களில் தரமான ரோடுகள் அமைத்து தர வேண்டும். பழுதடைந்த ரோடுகளை விரைந்து சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: