சிறு, குறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், பிப். 13:  திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சிறு, குறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  மத்திய இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு, ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், 1.42 லட்சம் பேரின் விவரங்களை, புள்ளியியல் துறை, வேளாண்துறை வசம் வழங்கியுள்ளது. தகுதியான விவசாயிகளை கண்டறியும் வகையில், கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.   இதில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள், சிட்டா - அடங்கல், ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரம், மொபைல் எண் போன்ற விவரங்களை, படிவத்தில் பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும். மேலும் தகவல் அறிய கிராம நிர்வாக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Related Stories: