தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி ரூ.9 ஆயிரம் கோடி முடக்கம் விடுவிக்க முரளிதரராவிடம் ‘சைமா’ கோரிக்கை

கோவை,பிப்.13: கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்ற ஜவுளித்துறை உரிமையாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் கலந்துரையால் நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதரராவ் கலந்து கொண்டார்.

அப்போது தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் (சைமா) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முரளிதரராவிடம் மனுவை அளித்தனர். இது குறித்து அச்சங்கத்தின் பொது செயலாளர் செல்வராஜூ கூறியதாவது:

13வது ஐந்தாண்டு திட்டத்தின் படி தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கென மத்திய அரசு ரூ.17,822 கோடி ஒதுக்கியுள்ளது. வங்கியில் நடைபெறும் குழப்பங்கள், அரசு அதிகாரிகளின் தவறுகளால் ரூ.9 ஆயிரம் கோடி மானியம் முடங்கியுள்ளது. இதனை முறைப்படுத்த வேண்டும். விரைந்து இந்த மானியத்தொகையை விடுவித்து தொழில்துறையினரின் நல் வாழ்விற்கு அரசு உதவ வேண்டும்.

இந்தியாவில் சின்தடிக் மூலப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். இந்த பொருட்கள் மீது குவிப்பு வரி உள்ளிட்ட இதர வரிகள் விதிக்கப்படுவதனால், 23 முதல் 30 சதவீதம் வரி விலை உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியாகும் போது 25 முதல் 30 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தவுடன் செயற்கை இழை ஆயத்த ஆடைகள் மீதான இறக்குமதி வரி குறைந்துள்ளது. இதனால் 46 சதவீதம் வரை இறக்குமதி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி 26 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்

மாநில வரிகளை திருப்பி அளிப்பதில் ஜி.எஸ்.டி வரியில் இடமில்லை, இந்த வரி மட்டும் 4 முதல் 5 சதவீதம் வந்துவிடுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

இவ்வாறு செல்வராஜூ கூறினார்.

Related Stories: