தேனீக்கள் கொட்டி ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 10 பேர் காயம்

கொடுமுடி, பிப்.13: ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நேற்று முன்தினம் கோவை கொண்டு சென்றனர். ஆம்புலன்சை எழுமாத்தூரை சேர்ந்த டிரைவர் சசி (35) ஓட்டினார்.

கொடுமுடி கணபதிபாளையம் அருகே சென்ற போது அப்பகுதி மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து திடீரென 108 ஆம்புலன்சின் ஜன்னல் வழியாக உள்ளே சென்று டிரைவரை கொட்ட துவங்கின.

இதனால் அலறியடித்த டிரைவர், உடனடியாக ஆம்புலன்சை திருப்பி வேறு பாதையில் சென்று தேனீக்களிடமிருந்து தப்பினார். ஆம்புலன்சின் பின்னால் இருந்த ஜன்னல்கள் மூடியிருந்ததால் நோயாளி மற்றும் அவரது உறவினர்கள் தப்பினர். இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் டிரைவர் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்ட பின் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் கோவைக்கு சென்றது.

இதற்கிடையே, அந்த வழியாக சென்றவர்களையும் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த சுமார் 9 பேர் கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Related Stories: