பரளி-வாளாந்தூர் வரை தூர் வாராமல் புதர் மண்டிக்கிடக்கும் வடிவாய்க்கால் 200 ஏக்கர் விவசாயம் செய்ய முடியாத நிலை

குளித்தலை,பிப்.13: பரளி-வாளாத்தூர் வரை வடிவாய்க்கால் தூர் வாராமல் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் 200 ஏக்கர் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், ராஜேந்திரம் கிராமத்தில், தண்ணீர் பள்ளியில் இருந்து பரளி செல்லும் சாலையின் மையப்பகுதியில் வாளாந்தூரில் இருந்து பரளி ரோடு வரை வடிவாய்க்கால் உள்ளது. அந்த இடத்தின் அருகில் செல்லும் சாலை வழியாகத்தான் விவசாயி இடு பொருட்கள் எடுத்து செல்ல வண்டிப்பாதை இல்லாததால் அனைத்து விவசாயிகளும், விவசாய பொருட்கள், உரம், குப்பை, மற்றும் நெற்கதிர்கள், வைக்கோல், வாழைக்கு ஊன்றும் குச்சிகள், வாழைக்கன்று உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பாதை இல்லாததால் அதிக கூலிக்கொடுத்து ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யாமல் முட்புதர்களாக காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் நிலச்சுவாந்தர்கள் மட்டும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதில் சிறு குறு விவசாயிகள் போதிய வசதி இல்லாமல் நிலங்கள் தரிசு நிலமாக கிடக்கிறது. அதனால் விவசாயிகள் நலன் கருதி பரளி சாலையில் இருந்து வாளாந்தூர் வரை செல்லும் வடிவாய்க்கால் தூர்வாரி பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.

இதே போல் பரளியிலிருந்து குமாரமங்கலம் வரை செல்லும் வடிவாய்க்கால் பாதை சீர்செய்து கொடுத்தால் அப்பகுதி விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து பயனடைய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: