அரியலூர் மாவட்டம் கரைவெட்டி சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி: பறவைகள் வருகை 40 சதவீதம் குறைவு

அரியலூர், பிப். 13: அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தது.  இதில்கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 40 சதவீத பறவைகளின் வருகை குறைந்துள்ளது தெரிய வந்தது.

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலான புள்ளம்பாடி வாய்க்காலின் வழித்தடத்தில் 2,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு நவம்பர் முதல் பிப்ரவரி இடையிலான காலங்களில் வெளிநாட்டிலிருந்து  ஆயிரக்கணக்கான பறவைகள் வருவதை ஆய்வு செய்த தமிழக அரசு கடந்த 1995ம் ஆண்டு இந்த ஏரியை  பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.

இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ரஷ்யா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மங்கோலியா, கஜகஸ்தான், நைஜீரியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் கூழக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கன், சாம்பல் நிற கொக்கு, வண்ணநாரை, நாமக்கோழி, நீர்காகம், வரித்தலை வாத்து, பெரியநாரை, புள்ளிமூக்கு நாரை உள்ளிட்ட 206க்கும் மேற்பட்ட வகையான  லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து

செல்கின்றன.

இதுபோல வருகை தரும் பறவைகளின் கணக்கெடுப்பும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு  கணக்கெடுப்பு பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. தஞ்சை தமிழ்பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் 7 பேர், அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர்கள் இருவர், மாணவர்கள் 12 பேர், அரியலூர் அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர்கள் 7 பேர், மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் என மொத்தம் 37 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பின் முடிவில், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 21 வகையான 22 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு பறவைகளை பொறுத்தவரை சில மாதங்கள் தங்கி செல்லக்கூடியவை. உள் நாட்டு பறவைகளை பொறுத்தவரை 53 வகையான பறவைகள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. உள்நாட்டு பறவைகள் அதிகபட்சம் சில நாட்கள் மட்டுமே தங்குவது வழக்கம்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகளின் வருகை 50 ஆயிரத்தை தாண்டும். நடப்பாண்டு பறவைகளின் கணக்கெடுப்பின் படி 40 சதவீத பறவைகள் வருகை குறைந்துள்ளது. இது கஜா புயலால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம் என கருதப்படுகிறது என்றார்.

திருவாருர், நாகை மாவட்டங்களில் பறவைகள் சரணாலயங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கு வருகை தந்த பறவைகள் தங்குவதற்கு போதிய இடமில்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்பியிருக்கலாம். அதனை கண்ட மற்ற பறவைகளின் வருகையும் குறைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த கரைவெட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகாமாக உள்ளது. இது வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் பரப்பளவு குறைந்து வருகிறது.  கரைவெட்டி ஏரியை முறையாக பராமரிக்காததாலும் பறவைகள் வர அச்சப்படுகின்றன என ஊர் பொதுமக்கள்

கூறுகின்றனர்.

Related Stories: