கீழப்பழுவூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் பலி

அரியலூர்,பிப்,13: கீழப்பழுவூர் அருகே துக்க காரியத்திற்கு சென்றபோது லோடு ஆட்டோ கவிழ்ந்து 39 பேர் காயமடைந்தனர். இதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாயினர்.

 அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே குந்தபுரம் கிராமத்திலிருந்து  வைப்பம் கிராமத்துக்கு துக்க காரியத்துக்காக நேற்று முன் தினம் லோடு ஆட்டோவில் 37 பெண்கள் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 37 பெண்கள்  காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் மேல்சிகிச்சைக்கு தஞ்சை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மனைவி சிவமாலை(50) மற்றும் இளஞ்சியம் (55) ஆகிய இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவு உயிரிழந்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலி மருந்தை தின்ற சிறுவன் பரிதாப பலி: அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தை சேந்த பிச்சை மகன் யோகநாதன்(11). இவர் மனவளர்ச்சி குன்றியவர். கடந்த 6ம் தேதி அன்று யோகநாதனை வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் விவசாய வேலைக்கு வயலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் சுவற்றின் மீது இருந்த எலி மருந்தை யோகநாதன் எடுத்து தின்றுள்ளார். பின்னர் மயக்க நிலையில் கிடந்த யோகநாதனை பெற்றோர் மீட்டு அரியலூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யோகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் எஸ்ஐ செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது விற்ற பெண் கைது:  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவைச் சேர்ந்த அருமைக்கண்ணு மனைவி பார்வதி(60) என்பவர் தனது பெட்டிகடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பார்வதியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: