அரியலூர் பகுதியில் வாக்குப்பதிவு சரி பார்ப்பு இயந்திரம் செயல்விளக்கம்

அரியலூர், பிப். 13: அரியலூரில்   தேர்தலில் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவது எவ்வாறு என  பொதுமக்களுக்கு  செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள  அரியலூர் மற்றும்  ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 6 வாகனங்கள் வீதம் மொத்தம் 12 விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான ஒரு செயல்முறை விளக்க பயிற்சியாளரும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையிலான ஒரு செயல்முறை விளக்க பயிற்சியாளரும், இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக ஒரு ஆயுதம் தாங்கிய காவலரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியில்   பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். வாக்காளர்கள் வாக்களித்த உடன் 7 வினாடிக்குள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்ற விபரத்தினை இயந்திரத்தின் கண்ணாடி வழியாக காண இயலும். 7 வினாடிகளுக்கு பின் இந்த ஒப்புகை சீட்டானது இயந்திரத்தின் உள்ளேயே உள்ள பாதுகாப்பான பெட்டியில் சேமிக்கப்படும். இந்த விபரத்தினை மாதிரி வாக்குப்பதிவு வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எருத்துக்காரன்பட்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசார  வாகனம் பொதுமக்களிடத்தில் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு பயன்படுத்தி செல்கின்றனர்.

Related Stories: