மாவட்டத்தில் உள்ள 7 உழவர் சந்தைகளில் குறைதீர் கூட்டம்

கோவை, பிப்.13: கோவை மாவட்டத்தில் உள்ள 7 உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள், கொள்முதல் செய்யும் நுகர்வோர் ஆகியோரின் குறை மற்றும் கோரிக்கைகளை தீர்க்க மாதம் தோறும் உழவர் சந்தைகளில் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர்.கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம், சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 7 இடங்களில் உழவர் சந்தை உள்ளது. இங்கு காய்கறிகள் விலை, மொத்த சந்தை விலையை விட 20 சதவீதம் அதிகமாகவும், சில்லரை சந்தையை விட 15 சதவீதம் குறைவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்கப்படுகிறது. இதில் காய்கறி விற்பனை செய்ய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இதில் சராசரியாக தினசரி ஆயிரம் முதல் 1,250 விவசாயிகள் காய்கறி விற்பனை செய்கின்றனர். சாதாரண நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், விடுமுறை நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் காய்கறி வாங்குகின்றனர். 7 உழவர் சந்தைகளிலும் சாதாரண நாட்களில் தினசரி ரூ.ஒரு கோடி மதிப்பிலான 200 டன் காய்கறிகளும், விடுமுறை நாட்களில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 240 டன் காய்கறி மற்றும் கனிகள் விற்பனையாகிறது.ஏற்கனவே உள்ள விவசாயிகள் தவிர புதிய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில்லை. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் குறைகளை களைய புகார் பெட்டி வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை வேளாண் வணிக துணை இயக்குநர் குறை கேட்பு கூட்டத்தை உழவர் சந்தையில் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து உழவர் சந்தை விவசாயிகள் கூறியதாவது: உழவர் சந்தைகளில் மேற்கூரை உள்ள கடைகள் குறைந்த அளவிலேயே உள்ளது. 3ல்1 பங்கு கடைகள் திறந்த வெளியில் உள்ளதால், வெயில், மழைக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தரை தளம் சேறும், சகதியுமாக உள்ளது. அவற்றிற்கு சிமென்ட் தளம் போட வேண்டும், உழவர் சந்தை கடைகள் பராமரிப்பு மேற்கொண்டு பல ஆண்டுகளாகியுள்ளது. சீர் செய்ய வேண்டும், மின் விளக்கு பழுதடைந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும், அதிகாலை வரும் விவசாயிகளுக்கு, இங்குள்ள கழிப்பிடங்களில் போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. மேலும் தினசரி விற்பனையான காய்கறிகள் தவிர மீதமாகும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க இட வசதியும், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்பதன வசதியும் வேண்டும், சில உழவர் சந்தைகளில் இருந்தாலும், அவற்றை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. கடைகள் ஒதுக்குவதிலும், விலை நிர்ணயம் செய்வதிலும் பாரபட்சம் நிலவுகிறது. குடிநீர் வசதி மற்றும் போதிய செக்யூரிட்டி வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.இது குறித்து உழவர் சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: உழவர் சந்தைகளில் அடையாள அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலர்களையோ மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்ந்த களிப்பணியாளர்களையோ அணுகி விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் சான்று, சிட்டா, அடங்கல் மற்றும் புகைப்படங்கள் 2, கள அலுவலர்களின் வயல் ஆய்வு அறிக்கை இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உழவர் சந்தைகளில் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை வழங்குவதில் சிரமம் இருந்தால், கோவை ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் குறைகளை களைய புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதர உழவர் சந்தைகளிலும் புகார் பெட்டி வைக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதர அத்தியாவசிய பிரச்னைகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது. பெரிய அளவிலான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்கிறோம். விரைவில் பூர்த்தி செய்யப்படும்’ இவ்வாறு உழவர் சந்தை நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: