கோவை ரயில் நிலையத்தில் ஏ.டி.வி மெஷினில் டிக்ெகட் பெறுவது அதிகரிப்பு

கோவை, பிப்.13: கோவை ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷினில் (ஏ.டி.வி.எம்) டிக்கெட் வாங்கி பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மேட்டுப்பாளைம் உட்பட 10 ரயில் நிலையங்களில் கடந்த 2 ஆண்டாக தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின் (ஏ.டி.வி.எம்) பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த 2017-2018ம் ஆண்டில் 10 ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள 16 தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின் மூலமாக 19,10,301 டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. 2018-2019ம் ஆண்டில் 25,02,398 ஆக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் டிக்கெட் விற்பனை 5,92,097 ஆக உயர்ந்துள்ளது. முன் பதிவு இல்லாத டிக்கெட்டுகளை இந்த மெஷின் மூலமாக உடனடியாக பெற முடியும். பகல் நேரங்களில் மட்டுமே இந்த மெஷின்கள் பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்டர்களில் மட்டுமே டிக்கெட் பெற முடியும். இது தவிர ஆர் வாலட் மூலமாகவும் முன் பதிவு இல்லாத டிக்கெட் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொபைல் செயலியை பயன்படுத்தி ஆர் வாலட்  மூலமாக 4,70,976 பயணிகள் டிக்கெட் பெற்றுள்ளனர். சேலம் டிவிசனில் ஆர் வாலட் மூலமாக பெறப்பட்ட ரயில் டிக்கெட் மூலமாக 58,56,895 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில், தானியங்கி டிக்கெட் வழங்கும் மெசின் மற்றும் ஆர் வாலட் மூலமாக 41,92,145 பயணிகள் டிக்கெட் பெற்றுள்ளனர். இதன் மூலமாக கடந்த 2017-2018ம் ஆண்டில் 34.14 கோடி ரூபாயும், 2018-2019ம் ஆண்டில் 46,17,035 பயணிகள் மூலமாக 38.42 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. போத்தனூர் ரயில்வே சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பணிமனையில் பாயின்ட் மெஷின், எலக்ட்ரானிக் டைமர், டிராக் பீடர் பேட்டரி, எல்.இ.டி சிக்னல் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் உற்பத்தி மூலமாக 81.93 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி வருவாய் 48 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related Stories: