எஜமானியை கைது செய்ய இழுத்ததால் இன்ஸ்பெக்டரை கடித்து குதறிய ‘‘பாசக்கார நாய்’’

சேலம், பிப்.13: சேலத்தில் தர்ணா நடத்திய பெண்ணை கைது செய்த இன்ஸ்பெக்டரை அவர் வளர்த்த பாசக்கார நாய் கடித்து குதறியது. சேலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி பாவாயிவட்டம் மீன்வாயன்ஓடை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சுளா (31), கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை எடுத்துச் செல்ல, அந்த பகுதியில் பழனிவேல் என்பவரது இடத்தில் பொதுவழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும் எனக்கோரி, அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, ஆர்டிஓ செழியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பிரச்னைக்குரிய இடத்தில் 4 அடிக்கு வழித்தடத்தை எடுத்து வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி அந்த நிலத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது நிலத்தின் உரிமையாளரான பழனிவேலின் மனைவி தங்கம்மாள் (65), அவரது மருமகள்கள் அஞ்சலை (42), ராமாயி (40), கண்மணி (33) ஆகிய 4 பேரும் நிலத்தை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார். 4 பெண்களையும் கைது செய்து, ஜீப்பில் ஏற்றினர். அதில், தங்கம்மாளை கைது செய்ய கையை பிடித்து இன்ஸ்ெபக்டர் வளர்மதி தூக்கினார். அப்போது அந்த பகுதியில் ஓரமாக நின்றிருந்த ஒரு நாய், வேகமாக பாய்ந்து வந்து இன்ஸ்பெக்டர் வளர்மதியின் கால் பகுதியை கடித்து குதறியது. ரத்தம் வழிந்தநிலையில், அவரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்டு, சிகிச்சை அளித்தனர். விசாரணையில், தங்கம்மாள் பாசமாக வளர்த்து வந்த நாய் தான், தனது எஜமானியை பிடித்து இழுப்பதை பார்த்தவுடன் பாய்ந்து சென்று கடித்திருப்பது தெரியவந்தது. இதனிடையே கைதான 4 பெண்கள் மீதும் சூரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: