கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சேலம், பிப்.13: அகில இந்தியா பார்கவுன்சில் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி  ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இந்தியா முழுவதும் வழக்கறி ஞர்கள் நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி சேலத்தில் வக்கீல்கள் சங்கத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்ஹாக் கமிட்டியின் உறுப்பினர்கள் சீனிவாசன், ராஜசேகரன், பாலகுமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து அட்ஹாக் கமிட்டி உறுப்பினர் சீனிவாசன் கூறியது: நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் சேம்பர், கட்டிட வசதி, இருக்கை வசதி, தரமான நூலகம், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் பணி துவங்கிய முதல் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் , இதற்காக ஆண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் 5ஆயிரம் கோடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார் கவுன்சில், பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தது. இதனை செய்து கொடுப்ப தாக பிரதமரும் ஒப்புக்கொண்டார். ஆனால் 5 ஆண்டாக எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. இதனை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். டெல்லியில்  பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கிறார்கள். சென்னையில் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கின்றனர். சேலத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கிறோம். வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு சீனிவாசன் கூறினார். தொடர்ந்து வழக்கறிஞர்கள், மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் வக்கீல் செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: