ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் சவாரி ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதல் போலீசார் சமரசம்

ஆத்தூர், பிப்.13: ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றி, இறக்குவதில் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் இடையே நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது. சாலையை மறித்து ஆட்டோக்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் பிள்ளையார் கோயில் அருகில்  ஆட்டோ ஸ்டேண்ட் செயல்பட்டு வருகிறது. கடந்த  சில மாதங்களாக ஆத்தூர்  நகரில் இருந்து நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  செல்பவர்களுக்காக சில  ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களின் ஆட்டோக்களை ஷேர்  ஆட்டோவாக இயக்கி வருகிறார்கள். இவ்வாறு இயக்கப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களின் ஆட்டோக்களை பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில்  பகுதியில் இருந்து இயக்குவதால், பிள்ளையார் கோயில் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள  ஆட்டோக்களுக்கு சரியாக சவாரி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதேபோல், புதிய  பேருந்து நிலையம் அருகே வங்கி எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில்  உள்ள ஆட்டோகளுக்கும் சரியாக வாடகை கிடைக்கவில்லை.

இதனால், இந்த 2 ஆட்டோ  ஸ்டேண்ட் டிரைவர்களும் சேர்ந்து, நகரில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை  சாரதா பங்க் அருகில் நிறுத்தி  இயக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்துவந்தனர். ஆனால், ஷேர் ஆட்டோ டிரைவர்கள் இதற்கு உடன்பாடாமல் வழக்கம்  போலவே, பயணிகளை ஏற்றி -இறங்கி வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த  ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்கள், நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் ஷேர்  ஆட்டோக்களை வழிமறித்து, பயணிகளை ஏற்றக்கூடாது என அதன் டிரைவர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் ஆட்டோக்களை சாலையில் குறுக்காக நிறுத்தினர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால்  அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்களை  சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆத்தூர்  நகரில் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதியில்லை. சிலர் தங்களில் ஆட்டோக்களை, ஷேர்  ஆட்டோவாக இயக்கி வருகிறார்கள். நினைத்த இடத்தில் சாலையில் ஆட்டோக்களை  நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும்  விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து  அதிகாரிகள் அனுமதியின்றி ஷேர் ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.

Related Stories: