பெரியார் பல்கலை.யில் இணைவுபெற்ற கல்லூரிகள் நாக் தரவரிசை பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்க வேண்டும் துணை வேந்தர் அறிவுறுத்தல்

ஓமலூர், பிப்.13: பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ்  இணைவுபெற்ற கல்லூரிகள் அனைத்தும் நாக் உள்ளிட்ட தரவரிசை பட்டியலில்  இடம்பெற விண்ணப்பிக்க வேண்டும் என துணை வேந்தர் அறிவுறுத்தினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், உள்தர மதிப்பீட்டு  உறுதிப்பாட்டு மையம் சார்பில், தேசிய அளவில் பல்கலைக்கழக  தரப்படுத்தப் படுத்துதல் மற்றும் தேசிய தர நிர்ணயக் குழு அங்கீகாரம்  குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் தலைமை வகித்தார். தேசிய  தரமதிப்பீடு மற்றும் அங்கீகார நாக் குழுவின் இணை ஆலோசகர் தேவேந்திர கவுடா  கலந்து கொண்டு பேசியதாவது: உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி,  கட்டமைப்பு, ஆய்வகத்தின் தரம், கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுச் சூழலை  மேம்படுத்துவது, தேசிய வளர்ச்சிக்கு உயர்கல்வியின் பங்களிப்பை உறுதி  செய்வது, மாணவர்களிடம் மதிப்பீடுகளை வளர்த்தல், தொழில் நுட்பங்களைப்  பயன்படுத்துதல் போன்றவற்றை அளவீடுகளாக கொண்டு, இந்திய உயர்கல்வி  நிறுவனங்கள் தரப்படுத்தப்படுகின்றன. உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்,  தேவைகள், தனியார் பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு உயர்கல்வி  நிறுவனங்களின் தரப்படுத்தல் உறுதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள  தரப்படுத்துதல் என்பது, பன்னாட்டு அளவில் பல நிறுவனங்கள் வந்து பார்வையிட்டு  ஆலோசனை பெற்றுச்செல்லும் அளவிற்கு உயர்வான நிலையை அடைந்துள்ளது. எனவே,  இந்தியாவில் உள்ள உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள், தங்களைத் தரமதிப்பீடு  அளவீட்டிற்குள் கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் பேசுகையில், உலகளவில் பல காலமாக நடைமுறையில் இருந்த தரப்படுத்தல் முறை, இன்றைக்கு  இந்தியாவில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

உயர்கல்வி வழங்கும் ஒவ்வொரு  நிறுவனமும், தேசிய தரவரிசை பட்டியல், தேசிய தரமதிப்பீடு மற்றும்  அங்கீகார குழுவின் புள்ளிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது  கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தேசிய அளவிலான தரவரிசையில் இடம்பெற்றால்  மட்டுமே, மத்திய நிதி நல்கை குழுக்களிடம் இருந்து ஆய்வுத் திட்டங்களுக்கு  தேவையான நிதியை பெற முடியும். எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ்  இணைவுபெற்ற கல்லூரிகள் அனைத்தும், நாக் உள்ளிட்ட தரவரிசை பட்டியலில்  இடம்பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான  அனைத்து உதவிகளை பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் என்றார்.

நிகழ்ச்சியில் அழகப்பா  பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில், பெரியார் பல்கலைக்கழக உள்தர  மதிப்பீடு மற்றும் உறுதிபாட்டு மையத்தின் இயக்குநர் வெங்கடாசலபதி,  தேசிய தரவரிசை பட்டியல் பணி ஒருங்கிணைப்பாளர் பாலகுருநாதன் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: