பத்ரகாளியம்மன் கோயில் விழாவில் குதிரையேற்றத்துக்கு தடை

மேட்டூர், பிப்.13: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மாசிமகத் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறும். ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள். விழாவில் குதிரையேற்றம் நடைபெறுவது வழக்கம். விழா காலத்தில் குதிரை மீது ஏறி வருவது தொடர்பாக, கமலநாதன், செந்தில்குமார், இளங்கோவன் தரப்பினருக்கும்-ரத்தனம், ராஜ்மோகன், லோகநாதன் தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று காலை மாசிமகத் தேர்த்திருவிழா துவங்குகிறது. இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படி மாசிமகத் தேரோட்டப் விழாவை கோயில் நிர்வாகமே நடத்துகிறது. விழாவில் குதிரையேற்றம் நடத்தக்கூடாது. அனைவரும் பங்கேற்கலாம் என கூறியுள்ளார். இதேபோல், மேட்டூர் ஆர்டிஓ லலிதா வெளியிட்ட அறிக்கையில், விழா நடைபெறும் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேரோட்ட பாதை மற்றும் சக்தி அழைத்தல் சத்தாபரண நிகழ்வுகளில் குதிரை வாகனம் உட்பட எந்த வாகனத்தினையும் எவறும் பயன்படுத்தக்கூடாது. இதற்கு முழு பாதுகாப்பு அளித்திட காவல் துறையினருக்கு தெரிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பால் மேச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: