திருச்செங்கோட்டில் காட்சிப் பொருளான போக்குவரத்து சிக்னல் கம்பங்கள்

திருச்செங்கோடு, பிப்.13: புராதனப்பெருமையுடன், தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியைக் கொண்டு ஆன்மிக நகராக விளங்கி வரும் திருச்செங்கோட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சேலம், சங்ககிரி, நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர், ஈரோடு, வெப்படை போன்ற ஊர்களிலிருந்து வரும் சாலைகள் திருச்செங்கோட்டில் சங்கமிக்கின்றன. ரிக் வண்டிகள், லாரிகள் நிறைந்த திருச்செங்கோட்டிற்கு வெளியூர்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. புறவழிச்சாலை வசதியோ, வட்டப்பாதையோ கிடையாது என்பதால் அனைத்து வாகனங்ளும் திருச்செங்கோட்டிற்குள் வந்து தான் செல்ல வேண்டும்.  மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ- மாணவிகளுக்காக இயக்கப்படும் நூற்றுக்கணக்கான பஸ்களும், வேன்களும் நகருக்குள் புகுந்து செல்கின்றன.

இதனால், எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகராக திருச்செங்கோடு உள்ளது. பீக் அவர் என்று சொல்லப்படும் காலை -மாலை நேரங்கள் மட்டுமின்றி காலை 7 முதல் இரவு 10 வரை போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித்தவிக்கின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த டிராபிக் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து போலீசாருக்கு உதவிடும் வகையில், ஈரோடு-வேலூர் கார்னர், தெற்கு ரதவீதி- அண்ணாசாலை சேருமிடம், புதி பஸ் நிலைய ரவுண்டானா போன்ற முக்கியமான இடங்களில் சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி சிக்னல் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், முறையாக இயங்காமல் காட்சிப் பொருளாக மாறியுள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருச்செங்கோடு நகரில் சீரான போக்குவரத்துக்கு வசதியாக பல்வேறு இடங்களில் சிக்னல்கள் பொருத்தப்பட்டது. ஆனால், கண்காட்சிக்கு வைக்கப்பட்டது போல், அந்த சிக்னல் விளக்குகள் அமைக்கும்போது, வெள்ளோட்டத்திற்கு எரிய விட்டதோடு சரி. அதன் பின்னர் எந்த சிக்னல் விளக்குகளும் எரியவில்லை. எனவே, மாவட்ட காவல்துறை தலையிட்டு இ்ப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்றனர்.

Related Stories: