பருத்தி ஏலத்தில் குறைவான விலை கேட்ட வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்,பிப்.13:  பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஆத்தூரைக் காட்டிலும் 1,300 குறைவாக வியாபாரிகள் விலை பேசியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆத்தூர் சாலையில் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கமும், பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும் இணைந்து பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் கடந்த வாரம் 5ம்தேதி நடத்திய ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பசும்பலூர், கவர்பனை, அனுக்கூர், பிம்பலூர், வேப்பந்தட்டை சுற்றுவட்டார விவசாயிகளால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ5781 வரைக்கும், குறைந்த பட்சமாக ரூ.5,500 வரைக்கும் ஏலம்போனது.

  இந்நிலையில் நேற்று (12ம்தேதி) நடந்த ஏலத்திற்கு வழக்கத்தைவிட அதிகமாக 2500 பருத்தி மூட்டைகள் வந்து குவிந்தன. இதில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தினர் கொடுத்த அழைப்பை ஏற்று ஏலம் எடுக்க வந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த திருச்செங்கோடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், அன்னூர், சேலம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்றுகூடி, பருத்தி மூட்டை அதிகமாக உள்ளது, விலையைக் குறைந்து கொள்முதல் செய்யலாம் எனத் திட்டமிட்டு விலையைக் குறைந்து கேட்கத்தொடங்கினர். குறிப்பாக 5 ஆயிரத்திற் கும் குறைவாக ஏலத்தொகை 4,900, 4800க்கும் குறைந்து கொண்டிருந்தது.

இதே நாளில் ஆத்தூரில் குவிண்டால் ஒன்று 6,100 வரைக்கும் விலை போவதாக அறிந்த பெரம்பலூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். இதில் குறைந்தது 700 முதல் அதிகபட்சம் 1300 வரைக்கும் விலை குறைந்து கொள்முதல் செய்யும் வெளி மாவட்ட வியாபாரிகளின் செயலால் கடும் அதிருப்தியடைந்தனர்.

 இதனால் பெரம்பலூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் ஒன்று கூடி, மாலை 3.30 மணியளவில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வருவாய் ஆய்வாளர், விஏஓ, போலீசார் வந்தபோதும், கிருஷ்ணாபுரம் அதிமுக பிரமுகர்கள் நேரில் வந்து விவசாயிகளிடம் ஏன் மறியலில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பருத்தி விவசாயிகளிலேயே பல அதிமுகவைச் சேர்ந்த விவசாயிகள் அண்ணே, ஆத்தூருக்கும் கிருஷ்ணாபுரத்திற்கு ஆயிரம் ரூபாய் இடிக்குதுண்ணே, எப்படிண்ணே பொறுத்துக்க முடியும், நீங்கவேணுண்னா, ஆத்தூர் விலைக்கு பேசி முடிங்க எனக்கேட்டதால், விவசாயிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அதிமுகவினர் பம்மியபடி திரும்பிச்சென்றனர். பிறகு வருவாய்த்துறை பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டதால் 4.15 மணியளவில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: