நற்சான்றிதழ் வழங்கிய நிலையில் இன்று நடக்க இருந்த ஜல்லிகட்டு ரத்து 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

நாமக்கல், பிப்.13: நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில் இன்று(13ம் தேதி) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டு, வரும் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லை அடுத்துள்ள அலங்காநத்தம் கோயில் நிலத்தில் இன்று(13ம் தேதி) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரசாத் தெரிவித்ததாவது: எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பத்தபோது பிப்ரவரி 11ம் தேதி நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததது. பின்னர், பல்வேறு காரணங்களுக்காக 13ம் தேதி நடத்த அனுமதி வழங்கி இருந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தோம். ஆனால், நேற்று மாலை 4 மணியவில் போட்டி நடத்த அனுமதி தரவில்லை. எனவே, 13ம் தேதி(இன்று) நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வரும் 16ம் தேதி(சனிக்கிழமை) ஜல்லிகட்டு நடத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இந்த போட்டிக்காக ₹4 லட்சம் வரையிலும் செலவு செய்துள்ளோம். 400 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுத்து விட்டோம். அவர்கள் புறப்பட்டு வந்து கொண்டுள்ளனர். போட்டி ரத்து செய்யப்பட்டதை மீண்டும் அவர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். மேலும், 400 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு இன்ஸ்சூரன்ஸ் செய்துள்ளோம்.

போட்டி நடைபெறும் இடங்கள் ஆய்வு செய்த அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளது என நற்சான்றிதழ் வழங்கி உள்ள நிலையில் திடீரென போட்டியை ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.

Related Stories: