நிலம், நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் மது பாட்டில்கள்

கிருஷ்ணகிரி, பிப்.13: தமிழகத்தில் கேரி பேக் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்ட்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்ட்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தற்போது ஓரளவு, பிளாஸ்டிக் கேரி பேக், கப் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை, பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் ஓரளவு சுற்றுபுற தூய்மை ஏற்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் இன்னும், மறைமுகமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்ததான் செய்கின்றனர். முற்றிலும் பிளாஸ்ட்டிக்கை ஒழித்துவிட்டதாக கூற முடியாது. இந்நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் மது பிரச்னை. மதுவால், சாதாரண கூலி தொழிலாளி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை சீரழிந்தும், தங்கள் குடும்பங்களை கஷ்ட நிலைக்கு தள்ளியும் வருகின்றனர். மது அருந்தி தினந்தோறும் பல்வேறு உயிரிழப்புகள், குற்ற சம்பவங்கள் அதிகரித்தவாறு உள்ளன. இதில், மது பாட்டில்களின் ஆக்கிரமிப்பு நிலம் மற்றும் நீர்நிலைகளை அழிக்கும் அபாய நிலையில் உள்ளது. மது பிரியர்களின் எண்ணிக்கை வெகுவாகவே அதிகரித்த நிலையில், மது பாட்டில்களை வாங்கி சென்று ஆங்காங்கே அமர்ந்து அருந்திவிட்டு அங்கே பாட்டில்களை தூக்கி வீசி செல்கின்றனர். இதில், வயல் வெளி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் மதுபாட்டில்கள் குவியல், குவியலாகவே கிடக்கின்றன. இதனால், வயல்களில் விவசாயிகள் கால் வைத்து விவசாயம் செய்ய முடியவில்லை. நீர் நிலைகளில் கால்கூட வைக்க முடியவில்லை. நகரின் முக்கிய பகுதிகளான பள்ளி, கல்லூரி, கோயில் வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், கழிவு நீரோடைகள் என அனைத்து இடங்களில் மதுபாட்டில்கள் காணப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பட்ட மக்களின் இயல்பு நிலை மாறி வருகிறது. எனவே, பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டும் அரசு, மதுபாட்டில்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி, சுறுப்புற சூழலை காத்திட வேண்டும்.

Related Stories: