கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய 15ம் தேதி கடைசி நாள் வேளாண் இயக்குநர் தகவல்

கிருஷ்ணகிரி, பிப்.13:  நெல் நவரை பருவத்தில், பயிர் காப்பீடு செய்ய வருகிற 15ம் தேதி கடைசி நாள் என கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சசீலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின், பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் 2018-19ம் ஆண்டில் தமிழ்நாட்டில நவரை பருவத்தில், சாகுபடி செய்யப்படும் நெற் பயிரை காப்பீடு செய்ய அரசாணை வௌயிட்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். இதன்படி, நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 196 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் லிட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறாக நவரை பருவத்தில், நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வருகிற 15ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ₹433.50 மட்டும் செலுத்தி தங்களது நெற்பயிரை காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை இணை இயக்குநர் சுசீலா தெரிவித்துள்ளார்.  

Related Stories: