ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை இரு மடங்கு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்,பிப்.13:  ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை 2 மடங்காக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி  மவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் சுமார் 1500 ஏக்கர் பரப்பில்  முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் பயிரிட ₹10 ஆயிரம் வரை  செலவாகிறது. நல்ல விளைச்சலை கொடுக்கும் என்பதால், ஒரு ஏக்கரில் 50 கிலோ  கொண்ட 500 மூட்டைகள் கிடைக்கும். ஆனால், தற்போது மழை இல்லாததால் பல  பகுதிகளில் முள்ளங்கி பயிரிடாமல் உள்ளனர். ஏற்கனவே பயிரிடப்பட்டதில் நல்ல  விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், ஒரு கிலோ முள்ளங்கி 2 மடங்காக விலை   உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து  உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்வேந்தன் கூறியதாவது: தினந்தோறும்  உழவர் சந்தைக்கு 4 டன் வரை முள்ளங்கி வந்தது. அப்போது ஒரு கிலோ ₹6 முதல்  8க்கு விற்பனையானது. இப்போது பருவ மழை இல்லாததால், முள்ளங்கி பயிரிட  முடியவில்லை. இதனால் வரத்து மிகவும் குறைந்து விட்டது. தற்போது நாள்  ஒன்றுக்கு சுமார் 2 டன் அளவிற்கு மட்டுமே, முள்ளங்கி வருகிறது. இதனால் ஒரு கிலோ முள்ளங்கி ₹18 முதல் 20 வரை விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஓசூர்,  தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியிலிருந்து கோவை, திருச்சி, சேலம், சென்னை  உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. முள்ளங்கி  விலை ஏற்றத்தால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: