கல் வீசிய சுற்றுலா பயணிகளை யானை துரத்தியதால் அலறியடித்து ஓட்டம்

பென்னாகரம், பிப்.13:  ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை சுற்றுலா பயணிகள் கல் வீசியதால், யானைகள் கோபமடைந்து துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. வறட்சி காரணமாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவதும் அடிக்கடி நடந்து வருகிறது. பண்ணப்பட்டி பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக, யானைகள் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியையொட்டியுள்ள அஞ்சநேயர் கோயில் பகுதியில், 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் இருந்த யானைகள் பக்கதில் சென்று பார்த்தனர்.

பின்னர் அவர்களது செல்போன்களில் யானைகளை புகைப்படம் எடுத்து கொண்டனர். சிலர் யானைகள் மீது கல்லை வீசி தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு யானை சுற்றுலா பயணிகளை துரத்த தொடங்கியது. இதனால் பீதியடைந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர். எனவே ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகள் கண்காணிக்கவும், சுற்றுலா பயணிகளால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. யானைகள் அடிக்கடி சாலைகளை கடந்து செல்வதால், அவற்றை புகைப்படம் எடுப்பது, கல் வீசி தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் யானைகள் கோபம் கொண்டு, மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதையும் மீறி யானைகளை துன்புறுத்தும் நபர்கள் மீது, வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Related Stories: