புயல் நிவாரணம் வழங்க கோரி இடும்பாவனம் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

முத்துப்பேட்டை, பிப்.13: புயல் நிவாரணம் வழங்க கோரிஇடும்பாவனம் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் தாக்கிய கஜா புயலின்  கோரத்தாண்டவத்தில் ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிவாரி போட்டதில் இப்பகுதி  மக்கள் மிகப்பெரியளவில் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் மிகப்பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு இன்னும் நிவாரணங்கள் போய் சேரவில்லை. இதனால் அடிக்கடி இப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடும்பாவனம் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் வீரசேகரன், சமூக ஆர்வலர் பாலு ஆகியோர் தலைமை வைத்தனர். பாஜக ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன், சமூக ஆர்வலர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கஜா புயலின்போது தனது பணியை சரிவர செய்ய தவறிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்தும்,  வீடுகளை இழந்து இதுவரை இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசையும் அதிகாரிகளையும் கண்டித்தும், கஜா புயலால் கால்நடைகளை இழந்து இதுநாள்வரை உரிய நிவாரணம் வழங்காமல் காலம் தாழ்த்தும் கால்நடைத்துறையையும் கண்டித்தும், கஜா புயலில்  விழுந்து சீரமைக்கப்பட்ட மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்த கோரியும், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்  வைக்கப்பட்டது.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் செல்லதுரை  பேசினர். . போராட்டத்தில் இடும்பாவனம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு  நிவாரணம் கிடைக்காத மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் இரவிலும் தொடர்ந்து ஈடுப ட முடிவு செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories: