முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசு உற்பத்தியாகும் அவலம்

 முத்துப்பேட்டை, பிப்.13:   முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசு உற்பத்தியாகும்  அவலம் ஏற்பட்டுள்ளது.இதனை பேரூராட்சி கண்டு கொள்ள வில்லை.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை 8வது வார்டு மரைக்காயர் தெருவில் நூற்றுக்கணக்கான வீடுகள் காலனி வீடுகள் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சியின் சுகாதார பணிகள் மந்தமான நிலையில் தான் உள்ளது. அதனால் அடிக்கடி குப்பைகள் கழிவுகள் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. இந்தநிலையில் மரைக்காயர் தெரு, தென்னை மரைக்காயர் தெரு சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் வடிகால் மற்றும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதுபோன்று அடிக்கடி ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகமும் பெயரளவில் அப்பகுதியில் தேங்கிய கழிவு நீரை மட்டும் அகற்றிவிட்டு சென்று விடுகின்றனர். பின்னர் மீண்டும் அப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுநீர் மீண்டும் தேங்கி விடும் அதேபோல்தான் தற்பொழுதும் சாலை முழுவதும் கழிவுநீர் வடிய வழியின்றி தேங்கி மினி குளம் போல் காட்சியளிகிறது. இதனால் இப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு இப்பகுதி மக்களை துன்புறுத்தி வருகிறது. அதேபோல் தொற்றுநோய்களும் பரவி வருகிறது. இது குறித்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் மாணவ, மாணவிகள் மூக்கை பிடித்துக்கொண்டு அருவறுப்புடன் சென்று வருகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் நலன்கருதி இப்பகுதியில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி தருவதுடன் அங்கு நிரந்தரமாக வடிகால் வசதியை ஏற்ப்படுத்தி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: