திறனாய்வு திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி

திருச்சி, பிப்.13: உலகத்திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

 தமிழக அரசு சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை இளம் வயதிலேயே கண்டறியும் பொருட்டு உலக திறனாய்வு கண்டறியும் திட்டம் என்ற திட்டத்தில் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்திறன் போட்டிகள் நடத்துகிறது. உடற்திறனை வெளிபடுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி மாவட்ட மற்றும் மண்டல அளவில் உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும். முகாமில் உணவு, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

 அதன்படி திருச்சி மாவட்டத்தில் லால்குடி கல்வி மாவட்டத்தினை சார்ந்த மாணவ, மாணவியருக்கு வரும் 18ம் தேதி காலை 8 மணியளவில் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், முசிறி கல்வி மாவட்டத்தில் முசிறி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி கல்வி மாவட்டத்தில் அண்ணா விளையாட்டரங்கிலும் நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். முதல் இரண்டு இடம் பிடிப்பவர் மண்டல போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: