கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி மணப்பாறையில் 2 அரசு பஸ்களை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியல்

மணப்பாறை, பிப்.13:   மணப்பாறையில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி 2 அரசு பஸ்களை மாணவர்கள் சிறைப்பிடித்து  மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை நிமித்தமாக தினமும் திருச்சி செல்கின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் திருச்சி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் உரிய நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து நேற்று கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி மாணவர்கள் திடீரென பேருந்து நிலையத்திற்குள் இரண்டு அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் குதித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் மணப்பாறை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: