நிதி நிறுவனங்களில் முறையாக ஆராயாமல் முதலீடு செய்ய வேண்டாம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி, பிப். 13:  திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலும், முறையாக பதிவு செய்யாமலும் பல போலி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆட்டு பண்ணை திட்டம், நாட்டு கோழி பண்ணை திட்டம், ஈமு கோழி பண்ணை திட்டம், கொப்பரை தேங்காய் பண்ணை திட்டம், மாட்டு பண்ணை திட்டம், தங்க நகைகள் முதலீட்டு திட்டம், வாரச்சீட்டு, மாத சீட்டு, தினசரி சீட்டு போன்றவைகள் மூலம் அதிக வட்டி தருவதாகவும், குறைந்த காலத்தில் இரு மடங்காக பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் நோக்கில் பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். முதலீடு செய்யும் முதலீட்டு தொகை முழுவதையும் மோசடி நபர்களிடம் இருந்து மீட்டு தரமுடியாத சூழல் ஏற்படும். எனவே பொதுமக்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனங்கள் பற்றி முழுமையாக விசாரித்தும் அந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நடத்தப்படும் நிறுவனமா, அந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, உண்மையான பங்குதாரர்களா, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து ஆராயாமல் முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் பணத்திற்கு 100 சதவீதம் உத்தரவாதம் வழங்கப்பட்டால் மட்டுமே அரசு நிதி நிறுவனங்களில் குறிப்பாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்து பலன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: