அரசின் உத்தரவு காற்றில் கரைந்தது கடைகளில் தொடரும் பிளாஸ்டிக் புழக்கம் முற்றிலும் ஒழிக்க கோரிக்கை

திருச்சி, பிப்.13: தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டிக்கு தடை விதித்தும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க முற்றிலும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையை தினமும் கடைபிடித்து வந்ததால் ஓரளவிற்கு பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டது.

இதனால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் துணிப்பை உள்ளிட்டவை கொண்டு வரும்படி கடை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், டீக்கடை மற்றும் டிபன் கடைகளில் பார்சலுக்கு பாத்திரங்களை கொண்டு வரும் படியும் வேண்டுகோள் விடப்பட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக் சோதனையை அதிகாரிகள் சற்று கைவிட்டதை அடுத்து மீண்டும் மாநகரில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. காந்திமார்க்கெட்டில் சர்வசாதாரணமாக பிளாஸ்டிக் பேப்பரில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதைபோல் டிபன் கடைகளிலும் பிளாஸ்டிக் பேப்பரில் குருமா, சாம்பார் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசின் உத்தரவை அதிகாரிகள் கண்டிப்பாக நிறைவேற்றி பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழித்து கட்ட வேண்டும் என வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: