அடிப்படை வசதியில்லாத பீமநகர் மாநகராட்சி பள்ளி பெற்றோர்கள் புகார்

திருச்சி, பிப்.13: திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ராஜேஸ்வரி பணிபுரிந்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை, கழிவறை வசதி இல்லை. தவிர மழைநீர் சூழும் அவல நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் திருச்சி கலெக்டர் ராஜாமணியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி ஆண்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கு நன்கு பாடம் நடத்துகின்றனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும், பள்ளியை நடுநிலையிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தாமலும் உள்ளது. இதனால் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எங்களை போன்ற ஏழை மக்களின் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைப்பது அபூர்வமான இந்த காலத்தில், சிறந்த கல்வியை வழங்கி வருகின்றனர். ஆனால், பள்ளி சுற்றுச்சூழல், அடிப்படை வசதி போன்ற காரணங்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மாநகராட்சியின் கடமை. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் கலெக்டரிடம் முறையிட வந்தோம்’ என்றனர்.

Related Stories: