தொப்பூர் அருகே மர்ம காய்ச்சலால் மலை கிராம மக்கள் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மலைக்கிராமங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையூர்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி பள்ளக்காடு, குறுக்குப்பள்ளம், போயர் தெரு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்கள் தர்மபுரி மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. இந்த கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலையையே அதிகமாக செய்து வருகின்றனர்.  இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி தவித்து வருகின்றனர். இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டும், காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்ளை சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேச்சேரி பகுதிகளில் இருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கிராமங்களில், சம்மந்தப்பட்ட மருத்துவத்துறைக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை சிகிச்சை அளிக்க முகாம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து கம்மம்பட்டி ஊராட்சி மக்கள் கூறுகையில், மலையூர்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. சளி, காய்ச்சல், உடல் வலி, தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவை ஒரே நேரத்தில் வருகிறது. இதனால் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே ஆண்கள் முடங்கு கின்றனர். கடந்த 3 வாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர்.  ஆனால் தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தகவல் தெரிவித்தும் டாக்டர்கள் வரவில்லை. மலைக்கிராம என்பதால், சுகாதாரத்துறை புறக்கணிக்கிறது. கம்மம்பட்டி ஊராட்சி சார்பில், காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எங்கள் கிராமங்களுக்கு வர பேதிய போக்குவரத்து வசதி கிடையாது. இதனால் மருத்துவர்கள் வரமறுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை மூலம் மருத்துவர்கள் நேரடியாக எங்கள் கிராமங்களில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: