தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக கடலூர், விழுப்புரம் எஸ்பிக்களுடன் புதுச்சேரி போலீசார் ஆலோசனை

புதுச்சேரி, பிப். 13:   பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் புதுச்சேரியில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுவையின் அண்டை மாநில பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் புதுவை 100 அடிசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா தலைமை தாங்கினார். இதில் பாதுகாப்பு தொடர்பாக இருமாநில போலீசார் இணைந்து செயல்படுவது குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் காண்பது, தலைமறைவு குற்றவாளிகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வது, அரசியல் பிரபலங்களின் பயண விவரம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் தகவல்கள் குறித்து பகிர்ந்து கொள்வது, புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மது கடத்தப்படுவதை தடுக்க இருமாநில போலீசார் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தேர்தல் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரு மாநில எல்லை பகுதி போலீசார் சந்தித்து பேசுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, கடலூர் எஸ்பி சரவணன், விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் டிஜிபி சுந்தரி நந்தாவை சந்தித்து, ஆலோசனை கூட்டத்தில் பேசிய விவரங்கள் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து புதுச்சேரி டிஜிபி, கடலூர் - விழுப்புரம் மாவட்ட டிஐஜி ஆகியோர் கலந்துகொள்ளும்உயர்மட்ட கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.     

ஆலோசனை கூட்டத்தில் எஸ்பிக்கள் ரங்கநாதன், ஜிந்தா கோதண்டராமன், ரகீம், மோகன்குமார், ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா செய்திருந்தார்.

Related Stories: