தேர்தல் நடத்தை விதிமுறை வருவதற்கு முன் 7வது ஊதியக்குழு பரிந்துரை

புதுச்சேரி, பிப். 13:   தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக 7வது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி சொசைட்டி கல்லூரி ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் நாளில், தங்களுக்கும் அப்பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அரசு சொசைட்டி கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இறுதியாக கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனிடையே கடந்த 28ம் தேதி மாலை போராட்டக்காரர்களை முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு கல்லூரிகளுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் அதே நாளில் சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் இதுதொடர்பாக அமைச்சரவையில் சுற்றறிக்கை மூலம் ஒப்புதல் பெறப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து போராட்டக்குழுவினர், தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக புதுவை பொறியியல் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளிட்ட அனைத்து சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதிசெயலர் கந்தவேலு ஆகியோரை நேரில் சந்தித்தும்

வலியுறுத்தியுள்ளனர்.    

Related Stories: