தனியார் இடத்தில் இயங்கி வரும் உப்பளம் குபேர் திருமண நிலையம் பயன்பாட்டுக்கு வராத அவலம்

புதுச்சேரி, பிப். 13:  புதுச்சேரி முதல்வர் நாராயண

சாமிக்கு, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வருட வாடகை செலுத்தி, புதுச்சேரி நகராட்சியின் குபேர் திருமண நிலையம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடற்கரையில் செயல்பட்டு வந்த புதுச்சேரி நகராட்சி கட்டிடம் சேதமடைந்த காரணத்தால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரிவு, வருவாய் பிரிவு-2 ஆகியவை கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக குபேர் திருமண நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இரு பிரிவும் அங்கேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தன. திடீரென உப்பளம் தொகுதி எம்எல்ஏ, நகராட்சியின் இரு பிரிவுகளை காலி செய்துவிட்டு திருமண நிலையத்தை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக 2017ம் ஆண்டு முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரிவு முதலியார்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கும், வருவாய் பிரிவு-2 மாத வாடகைக்கு வர்த்தக சபை கட்டிடத்திற்கும் இடமாற்றம் செய்துவிட்டனர்.

 குபேர் திருமண நிலையம் காலி செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வம்படியான எந்தவித சீரமைப்பு பணியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு வருட வாடகையாக 2009ம் ஆண்டின்படி ரூ.32,197 அறக்கட்டளைக்கு செலுத்தி வருகின்றனர். எவ்வித முன் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர் போராட்டம் நடத்தினார் என்கிற ஒரே காரணத்திற்காக உடனடியாக அவசர கதியில் காலி செய்ததால் நகராட்சி நிதி தேவையின்றி வீணடிக்கப்பட்டு வருகின்றது. எனவே, எந்த நோக்கத்திற்காக காலி செய்யப்பட்டதோ அதன்படி குபேர் திருமண நிலையத்தை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும், இந்த மனுவின் நகலை கவர்னர் மற்றும் உள்ளாட்சி செயலருக்கும் அனுப்பியுள்ளார்.

Related Stories: