காங். நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேரிடம் விடிய விடிய விசாரணை

வில்லியனூர், பிப். 13: வில்லியனூர் அடுத்த மணக்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி சபரிகிரிராஜன் என்பவர் வீட்டில் கடந்த 10ம் தேதி மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதுதொடர்பாக அவர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்பி ரங்கநாதன் உத்தரவின்பேரில் இனஸ்பெக்டர் பழனிவேல், சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் கார்த்தி (32), மணி (28), ஆலமரத்தூர் பகுதியை ேசர்ந்த மதி ஆகியோரை போலீசார் செல்ேபானில் தொடர்பு கொண்டு மங்கலம் காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.பிறகு அவர்களை நேற்று முன்தினம் முழுவதும் விசாரணைக்காக காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், உறவினர்கள் மற்றும் பாமகவைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 6 மணிக்கு தவளக்குப்பம்- மடுகரை சாலை நல்லாத்தூரில் சாலை மறியல் செய்தனர். சுமார் 3 மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மங்கலம் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினர். மங்கலம் போலீசார் விசாரணைக்கு வந்த 3 பேரையும் விடுவிப்பதாக வாக்குறுதி அளித்தனர். இத்தகவல் கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.பின்னர் போராட்டக்காரர்கள் மங்கலம் காவல் நிலையத்துக்கு சென்று 3 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் பழனிவேல், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவல் நிலையத்தில் இருந்த கார்த்தி, மணி, மதி ஆகிய 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: