சின்னசேலம் பகுதியில் தொடர் விபத்துகளை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சின்னசேலம், பிப். 13:  சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் வாகன விபத்துகளை தடுத்திட போக்குவரத்துதுறை சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 விழுப்புரம் மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் நகரமாகும். சின்னசேலத்தை ஒட்டி கடலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்ட கிராமங்கள் உள்ளது. அதைப்போல சேலம்- சென்னை புறவழிச்சாலை, சேலம்- நெய்வேலி சாலைகள் உள்ளது. இந்த இரு சாலைகளிலும் சமீபகாலமாக அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. இதற்கு வாகன ஓட்டிகளிடமும், சாலையோரம் நடந்து செல்லும் மக்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாகும். குறிப்பாக சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் ரயில் நிலையங்களிலும், புறவழிச்சாலைகளிலும் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.  இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு புறவழிச்சாலையில் நடை பயிற்சிக்காக சென்ற வங்கி ஊழியர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இருப்பினும் பலர் அந்த சாலையில் தான் நடை பயிற்சி செய்கின்றனர். அதைபோல மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பலர் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டி சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். தலைக்கவசம் அவர்களின் உயிர் கவசம் என்பதை மறந்து விடுகின்றனர்.ஆகையால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் கள்ளக்குறிச்சியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் துணையுடன் விழிப்புணர்வு ஊர்வலம், சாலைபாதுகாப்பு வாரவிழா கூட்டங்களை நடத்த வேண்டும்.  வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் சின்னசேலம் பஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் இத்தகைய கூட்டங்களை நடத்தி மக்களை, மாணவர்களை போதிய அளவில் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: