குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, பிப். 13:  குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும், மின்மோட்டார் பழுதாகியதை சீரமைக்க வலியுறுத்தியும் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.    கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி 5வது வார்டு நடுதக்கா பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு, அதே பகுதியில் நகராட்சி மூலமாக ஆழ்குழாய் கிணறுடன் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெரு பகுதியில் பைப் லைன் அமைத்துள்ளனர். அதன்படி நகராட்சி மூலமாக கூட்டு குடிநீர் வழங்கி வந்தனர். கடந்த சில நாட்களாக மினி டேங்க் மோட்டார் பழுதாகிய நிலையில் உள்ளது. மேலும் கூட்டு குடிநீரும் சரிவர விநியோகம் செய்வதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து தினமும் பயன்படுத்தி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்மோட்டார் பழுதாகியதை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று காந்தி ரோடு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை(இன்று) முதல் தெரு பகுதிக்கு குடிநீர் வழங்கவும், பழுதாகிய மின்மோட்டாரை உடனே பழுது நீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மூலமாக நடடிக்கை எடுப்பதாகவும் கூறி உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: