மாற்றுத்திறனாளிகளுக்கு ₹18 லட்சத்தில் நலத்திட்ட உதவி

கடலூர், பிப். 13: கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,68,400 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வழங்கினார்.கடலூர் டவுன் ஹாலில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் 165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,68,400 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,மாற்றுத்திறனாளிகள் 5000 நபர்களுக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். மற்றவர்களைப்போல் மாற்றுத்திறனாளிகள் சிறந்து விளங்கி, சமூகத்தில் சாதனையாளராக விளங்கி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து வாழ்க்கையில் உயர்வடைய மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.  இவ்விழாவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு பள்ளிகளில் கல்வி பயிலும் சுமார் 400 மாணவ, மாணவியர்களும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 300 மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மேலும் இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் லட்சுமி, மாவட்ட கருவூல அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, அரசு பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்கியல் வல்லுநர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

Related Stories: