சாலையோர இறைச்சி கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

நெய்வேலி, பிப். 13: நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் அருகே வடக்குத்து ஊராட்சியில் பல்வேறு நகர் பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் முக்கிய சாலை தற்போது நான்கு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களுக்கு தேவையான இறைச்சி கடைகள் சாலையோரம் இருப்பதால் இப்பகுதி மக்கள் மட்டுமன்றி டவுன்ஷிப் பகுதியில் இருந்து கறி, மீன் போன்றவற்றை வாங்கி செல்ல ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது.இதனால் சாலையோரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இந்த இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாலை ஓரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி நோய் தொற்று அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் புகார் செய்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சாலை ஓரத்தில் உள்ள இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: