இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடுகளை பலியிட தனியிடம் தேவை

சாத்தூர். பிப். 13: சாத்தூர் அருகே, இருக்கன்குடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினசரி பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக மொட்டை போட்டு, ஆடுகளை பலியிட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அதிகமாக ஆடுகளை பலியிடும் நிகழ்வு நடக்கிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டு பலியிடுகின்றனர். ஆனால், கோயிலில் ஆடுகள் வெட்டுவதற்கு தனியிடம் அமைக்கப்படவில்லை.

கோயிலுக்கு பின்புறம் பனைமரப் பகுதியில் பக்தர்கள் வரும் பாதையில் ஆடுகளை பலியிடுகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆட்டின் கழிவுகள், ரத்தம் ஆகியவற்றை விட்டு செல்வதால், பக்தர்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. ஆட்டின் கழிவு மற்றும் எலும்புகளை தின்பதற்காக நாய்களும் சுற்றித் திரிகின்றன. அவைகள் பக்தர்களை அச்சுறுத்துகின்றனர. எனவே,  பக்தர்களின் நலன் கருதி, நவீன வசதியுடன் ஆடுகளை பலியிட தனியிடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது: ஆடுகள் பலியிடுவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடுவதைக்கூடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: