தாயில்பட்டி-கனஞ்சாம்பட்டி மார்க்கத்தில் விபத்து எச்சரிக்கை இல்லாத விலக்கு சாலை வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

சிவகாசி, பிப். 12: வெம்பக்கோட்டை அருகே, தாயில்பட்டி-கனஞ்சாம்பட்டி விலக்கில், விபத்து எச்சரிக்கை சேதமடைந்து கிடப்பதால், அறியாமல் வரும் வாகன  ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை தாலுகா 2 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. முன்பு ஒன்றியமாக இருந்தபோதும் சாலை வரிவாக்கம், புதிய சாலை, பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட எந்தவித கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை. இந்த ஒன்றியத்தில் கிராமச் சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. வெம்பக்கோட்டை புதிய தாலுகாவான பின்னரும் அதே நிலையில்தான் உள்ளது. இந்த தாலுகாவில் உள்ள 48 கிராம பஞ்சாயத்துக்களிலும் சாலை மிகவும் மோசமாக உள்ளன. குறிப்பாக சாலைகளில் போக்குரத்து பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விளக்குகள், வழிகாட்டி போர்டுகள், விபத்து தடுப்பு எச்சரிக்கை பலகைகள் முறையாக வைக்கப்படவில்லை. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், வெம்பக்கோட்டை அருகே, தாயில்பட்டி கிராமத்தில் இருந்து மடத்துப்பட்டி வழியாக கனஞ்சாம்பட்டிக்கு செல்லும் சாலை 11 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சாலைக்கு மாற்றாக  தாயில்பட்டி- விஜயகரிசல்குளம் சாலையில் இருந்து 5 கி.மீ தொலைவில்  கனஞ்சாம்பட்டிக்கு செல்லலாம். இந்த சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடத்தில் பட்டாசு ஆலைகள் அதிகமாக உள்ளன. இதனால், வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், தாயில்பட்டி-கனஞ்சாம்பட்டி விலக்கு சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்து எச்சரிக்கை போர்டு வைத்திருந்தனர். தற்போது அந்த போர்டு சேதமடைந்துள்ளது. இதனால், சாலை சந்திப்பில், கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இரவு நேரங்களில் விஜயகரிசல்குளம் பகுதியில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், திருப்பத்தில் அமைந்துள்ள கனஞ்சாம்பட்டி விலக்கில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, விலகிச்செல்ல முற்படும்போது எதிர்பாராத விபத்துகள் நடக்கின்றன. எனவே, இந்த விலக்கில் விபத்து எச்சரிக்கை பலகையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: