பத்திரப்பதிவு அலுவலகங்களில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்குடி, பிப். 13:  காரைக்குடியில் இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் குறுகலான சந்தில் செயல்பட்டு வருவதால் அலுவலகம் வரும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தவிர போதுமான கழிப்பறை வசதி, இருக்கை வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி செஞ்சை, முத்துப்பட்டணம் பகுதிகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முத்துப்பட்டணம் பகுதியில் கீழ் தளத்தில் பத்திரப்பதிவு அலுவலகமும், மேல் தாளத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும் உள்ளது. இங்கு பத்திரப் பதிவு, வில்லங்க சான்று, திருமண பதிவு உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.காரைக்குடி நகர், ஆலங்குடி, இலுப்பகுடி, குன்றக்குடி உட்பட பல்வேறு பகுதி மக்கள் செஞ்சை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கும், முத்துப்பட்டணம் அலுவலகத்திற்கு நகராட்சி 1 முதல் 6 வார்டுகள், கோட்டையூர், கண்டனூர், ஸ்ரீராம் நகர், புதுவயல், நேமத்தான்பட்டி வரை உள்ள பொதுமக்கள் பத்திரப்பதிவுகளுக்காக வருகின்றனர். தினமும் இரண்டு அலுவலகத்துக்கும் சேர்த்து 2000க்கும் மேற்பட்ட மக்கள் வருகிறனர்.தவிர மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். மாவட்டத்தில் அதிக வருமானம் வரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகமாக இவ் அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த இரண்டு அலுவலகங்களுமே குறுகிய 10 அடி சந்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படுகின்றன.பத்திரப்பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அமரக்கூட இடம் இல்லை. பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலையில் அவசர தேவைகளுக்கு என போதுமான கழிப்பறை வசதி கிடையாது. வாகனங்கள் வைக்க வழியே இல்லை. இவ் அலுவலகங்களை ஒரே இடத்தில் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலைக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘மாவட்டத்தில் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் இடமாக இந்த அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகத்தில் இதுவும் ஒன்று. இங்கு முகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும். பத்திரப்பதிவுக்கு என வரக்கூடிய மக்கள் அமர போதுமான இடம் இல்லை. குடிநீர் வசதி இல்லை. போதிய கழிப்பறை வசதி இல்லை. குறுகிய சந்தில் இருப்பதால் வாகனம் வைக்கக்கூட போதிய இடம் இல்லை.ஒரு நபர் உள்ளே நின்றால் மற்றவர் வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது. காற்றோட்டம் இல்லாமல் சிறிய அறையில் அடைத்துக் கொண்டு பதிவுக்காக நிற்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: