சீமைக்கருவேல மரங்களை அகற்றாததை கண்டித்து கண்மாயில் குடியேறும் போராட்டம் கிராம மக்கள் அறிவிப்பு

சிவகங்கை, பிப். 13: சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டி ஆதினிக்கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாததை கண்டித்து பிப்.16ல் கண்மாய்க்குள் குடயேறும் போராட்டம் நடத்தப்படும் என கிராமத்தினர் அறிவித்துள்ளனர்.கள்ளராதினிப்பட்டியில் உள்ள ஆதினிக்கண்மாய் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இக்கண்மாய் பரப்பளவில் 60 ஏக்கர் சிவகங்கை மாவட்ட எல்கையிலும், 40 ஏக்கர் மதுரை மாவட்ட எல்கையிலும் உள்ளது. இக்கண்மாய் பாசன நிலமாக சுமார் 500 ஏக்கர் உள்ளது. 2016ம் ஆண்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையடுத்து பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கண்மாய்களில் உள்ள மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டது.இந்த கண்மாய்க்கும் ஏலம் நடந்தது. ஆனால் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதையடுத்து அரசு சார்பில் சீமைக்கருவேல மரம் அகற்றும் பணி தொடங்கப்பட்டு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மட்டும் மரங்கள் அகற்றப்பட்டன. மாவட்டம் முழுவதும் மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற வெண்டர் நடந்த நிலையில் கள்ளராதினிப்பட்டி கண்மாயில் மட்டும் டெண்டர் விடுவதற்கான ஏற்பாடும் இல்லை. அரசே மரங்களை அகற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இதேநிலை தொடர்வதால் கண்மாயில் நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிராமத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பிப்.16ல் கண்மாய்க்குள் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என கிராமத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கண்மாயில் 100 ஏக்கரிலும் முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் மண்டியுள்ளதால் இப்பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. கண்மாய் நீர்வரத்து பாதை இந்த மரங்களால் தடுக்கப்பட்டுள்ளது. கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் நிலத்தடி நீரும் விரைவாக உறிஞ்சப்படுகிறது. அடர்ந்த காடாக காட்சியளிப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக கண்மாய் மாறியுள்ளது. இப்பகுதிக்கே கிராமத்தினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

Related Stories: