சிவகங்கை அரசு கல்லூரியில் வகுப்பறை பற்றாக்குறை மாணவர்கள் கடும் அவதி

சிவகங்கை, பிப். 13: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 3000 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இக்கல்லூரி முதல் நிலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு சிப்டுகளாக இயங்கும் இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட 11 துறைகள் உள்ளன. இதில் 10 துறைகளுக்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் உள்ளன. மேலும் எம்பில் பட்டப்படிப்பும் இங்கு உள்ளது.

இரண்டு சிப்டுகளாக நடத்தப்படுவதால் முதல் சிப்ட் மாணவர்கள் சென்றவுடன் இரண்டாவது சிப்ட் மாணவர்கள் அதே வகுப்பறையில் படிக்கின்றனர். இளங்கலை வகுப்புகளுக்கு மட்டுமே இதுபோல் சிப்ட் அடிப்படையில் வகுப்பறைகள் கிடைக்கின்றன. கணிதம், பொருளியல், வரலாறு, விலங்கியல் உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு வகுப்புகளுக்கும், தமிழ் தவிர பிற எம்பில் வகுப்புகளுக்கும் போதிய வகுப்பறை இல்லை. இவ்வாறு 20க்கும் மேற்பட்ட வகுப்பறை பற்றாக்குறையாக உள்ளது. இதனால் எப்பொழுது வகுப்பறை கிடைக்கிறதோ அந்த நேரத்திற்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இதுபோல் எம்பில் வகுப்புகளுக்கு போதிய பேராசிரியர் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘போதிய வகுப்பறை இல்லாததால் உணவு இடைவேளை நேரத்தில் முதுகலை மற்றும் எம்பில் மாணவர்களுக்கு பிற மாணவர்களின் வகுப்புறைகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மதிய நேரத்தில் வகுப்பு முடித்து வீட்டுக்குச் செல்ல பெரும்பாலான ஊர்களுக்கு பஸ் கிடையாது. இதனால் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கல்லூரியில் ஆண்டுதோறும் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான வகுப்பறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. வகுப்பறைகள் உள்ளிட்ட கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.  

Related Stories: