நெல்லுக்கு உரிய விலை கிடைக்க அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

கீழக்கரை, பிப்.13: கீழக்கரை தாலுகா பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டியும், தில்லையேந்தல் மற்றும் காஞ்சிரங்குடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, காஞ்சிங்குடி பசுமை தாயகம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகி மதுரை வீரன் கலெக்டர், கீழக்கரை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்.அந்த மனுவில், கீழக்கரை தாலுகா பகுதியில் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இந்த பகுதியில் வசித்து வருபவர்கள் பெருமளவில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த விவசாய கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் உற்பத்தி செய்து வரும் உணவு பொருட்களான, குறிப்பாக நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல், வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஆகவே கடந்த காலங்களில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு வறுமையில் வாடிவரும் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் வகையில், விளையும் நெல்லுக்கு அரசின் மூலம் உரிய விலை கிடைக்க வேண்டும். இதற்கு கீழக்கரை தாலுகா பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தில்லையேந்தல் மற்றும் காஞ்சிரங்குடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, கண்மாய், குளம் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: