விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தாலுகா அலுவலகத்தில் பதிவு பணி மும்முரம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 13: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பலன் பெறும் விதமாக தாலுகா முழுவதும் பதிவு தீவிரமாக நடைபெற்ற வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பிரதமர் கிசான் சம்மன் நிதி ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.க்கள் பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், ஆனந்தூர் பகுதிகளில் மிகவும் மும்முரமாக விண்ணப்பங்களை விவசாயிகள் கொடுத்து வருகின்றனர். இவற்றை ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் தமீம் ராஜா ஆய்வு செய்தார். இத்திட்டத்திற்கு மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டது. இத்திட்டத்தில் சுமார் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, அதாவது 2 ஹெக்டேர்கள் (5 ஏக்கர்) வரை விவசாயம் செய்யக் கூடிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு முதல் தவணையாக மார்ச் 31ம் தேதிக்குள் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட இருப்பதாகவும், 2வது தவணைக்கு ஆதார் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக மழை தண்ணீர் இல்லாமல் முற்றிலும் விவசாயம் பொய்த்து போனது. இத்திட்டம் விவசாயிகளுக்கு யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல் உள்ளது. எங்களுக்கு கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை இன்று வரை வழங்காதது மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் விரைவில் வழங்கப்படும் என்றார்கள். ஆனால் இன்று வரை வழங்கவில்லை. இதற்கிடையில் இத்திட்டம் அரசியல் லாபத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பதனை நினைத்து பார்த்தால் விவசாயிகளான எங்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்த்துவது போல் உள்ளது என்றனர்.

Related Stories: