மாவட்டம் முழுவதும் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

சாயல்குடி, பிப்.13: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வறட்சியான ராமநாதபுரம் மாவட்டம், கடற்கரையை ஒருங்கே பெற்றுள்ளதால், குடிநீர் ஆதாரங்களும் உவர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களில் 249 ஊராட்சிகளும், கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 நகராட்சிகளும், சாயல்குடி, தொண்டி, அபிராமம், கமுதி உள்ளிட்ட 7 பேரூராட்சிகளும் உள்ளன. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல குடிநீர் திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு, அனைத்தும் முடங்கியது. 2010ல் ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், அருகிலிருக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சில பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, குடிநீர் உற்பத்தி குறைவு, முறையான பராமரிப்பின்மை, அதிகாரிகளின் மெத்தனபோக்கு போன்றவற்றால், கிராமங்களுக்கு செல்வது தடைபட்டுள்ளது. இதனால் சாலையோரம் செல்லும் குழாயிலிருந்து கசியும் நீரை பல மணி நேரம், காத்து கிடந்து எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக முதுகுளத்தூர் தொகுதி உள்ளது. இப்பகுதியில் நிரந்தர நீராதாரங்கள் இல்லாததால், கிராமங்களிலுள்ள கண்மாய், குளங்கள் வறண்டும், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றியும் கிடக்கிறது. இதனால் தண்ணீருக்கு பொதுமக்கள் அலைந்து திரியும் பரிதாப நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

கடந்த 1998-99ம் ஆண்டுகளில் சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 296 கிராமங்களில் தடையின்றி தண்ணீர் கிடைத்து வந்தது. ஆள்குறைப்பு, போதிய பராமரிப்பு இன்மை, குத்தகை பணத்தை அரசு செலுத்தாதது போன்ற காரணங்களால் கடந்த 9 வருடங்களாக இத்திட்டம் செயல்படாமல் முடங்கியது. குடிநீருக்காக சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கிராமமக்கள் கூறும்போது, ‘‘கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசியும் தண்ணீரை இரவு, பகலாக காத்து கிடந்து எடுத்து வருகிறோம். வறட்சியால் விவசாயம் பொய்த்து போய் விட்டது, பயிர்காப்பீடு திட்ட இழப்பீடு தொகையும் கிடைக்காமல், வறுமையில் வாடி வரும் நிலையில் குடிப்பதற்கு டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.5 முதல் கொடுத்து வாங்கி வருகிறோம். இதில் 150க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு தண்ணீர் டிராக்டர் வசதியில்லாததால் கிராமத்தை விட்டு, பொதுமக்கள் வெளியேறி கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக கூறுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட சாயல்குடி அருகே குதிரைமொழி கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தை கோடை காலம் வரும் முன் துவங்கி, பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்’’ என்றனர். முதுகுளத்தூர் எம்எல்ஏ மலேசியாபாண்டி கூறும்போது. ‘‘‘குதிரைமொழி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடன் துவங்கவேண்டும். தற்போதைய பட்ஜெட் வெறும் வாசிப்பு பட்ஜெட்டாக தான் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்காததால், மாநில அரசு கடனில் தத்தளிக்கிறது. பொருளாதாரம் இன்றி, மக்கள் பயன்படும் வகையிலான பட்ஜெட்டாக இல்லை. மக்களுக்கான புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. நரிப்பையூரில் முடங்கி கிடக்கும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்த போகிறேன்’’ என்றார்.

Related Stories: