கடலாடி பகுதி விவசாயிகளுக்கு வறட்சியிலும் கைகொடுக்கும் பாகற்காய்

சாயல்குடி, பிப். 13:கடலாடி தாலுகாவில் பெரிய கிராமமாக ஆப்பனூர் உள்ளது. ஆப்பனூர் தோப்பு கொட்டகை, தெற்குகொட்டகை என 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயத்தை மட்டுமே நம்பி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக போதிய பருவமழையின்றி விவசாயம் பொய்த்து போய் வருவதால், நெல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. நெல் விவசாயத்தோடு நிற்காமல், சுமார் 100 வருடங்களுக்கு மேலாக பாகற்காய் சாகுபடியில் இக்கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆப்பனூர் கண்மாயில் வண்டல் மண் எனப்படும் கரம்பை மண் நிலமாக அமைந்துள்ளது. இதில் சிறிய வடிவிலான மிதி பாகற்காயை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது வறட்சி ஏற்பட்டு கண்மாய் வரண்டு போய் விட்ட நிலையிலும், டிராக்டர் தண்ணீரை தெளித்து, செடியை காப்பாற்றி, காய் பறித்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் சந்தைகளிலும், கடைகளிலும் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆப்பனூர் முத்துவிஜயன் கூறும்போது, கரம்பை மண் களிமண்ணாக மாறக்கூடிய தன்மை கொண்டது என்பதால், கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் போதை விதை, விதைத்து விடுவோம்,. ஒரு வாரத்திற்குள் செடி முளைத்ததும், பூ, பூத்து காய் காய்த்து விடும். சுமார் 6 வாரங்கள் வரை நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல விளைச்சல் கிடைக்கும்போது, கிலோ ஒன்றிற்கு ரூ.15 முதல் விலைக்கு விற்போம். தற்போது வறட்சி ஏற்பட்டு நீர்நிலைகளும் வறண்டு விட்டது. இதனால் டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை, செடியின் தூர்களில் தெளித்து சாகுபடி செய்து வருகிறோம். பாகற்காய் அதிக கசப்பு தன்மையின்றி, மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் அதிகளவில் விற்பனையாகியது. சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, இளையான்குடி, கமுதி, பரமக்குடி சந்தைகளில் நேரடியாக சென்றும், மற்ற நாட்களில் கடைகள் மூலமாக விற்று வருகிறோம். இதனை மதுரை போன்ற நகரங்களுக்கு கடை வியாபாரிகள் விற்று வருகின்றனர். வரும் காலங்களில் பாகற்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, கண்மாயில் நீர்த்தேக்க தடுப்பணைகள், தொட்டிகள் கட்டி தரவேண்டும். அரசு மானியத்தில் ஸ்பிரிங்கர் தண்ணீர் தெளிப்பான்,சொட்டு நீர் பாசன குழாய்கள், உரங்கள் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: