மதுரை ஜிஹெச்சில் காம்ப்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டருக்காக இடிக்கும் பகுதிகள் என்னென்ன?

மதுரை, பிப். 13: மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே இடத்தில் 26 ஆபரேஷன் தியேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட `காம்ப்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டர்’ என்ற பெயரில் அமைய உள்ளது. இதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கட்டிடம் மருத்துவமனையில் ஆடிட்டோரியம், அதனை ஒட்டியுள்ள ஆபரேஷன் தியேட்டர் வளாகம் மற்றும் சலவைக்கூடத்தை இடித்துவிட்டு அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த இடம் ஜைக்கா நிறுவனத்திற்கு திருப்திகரமாக இல்லாததால் மாற்று இடமாக மருத்துவமனையின் முகப்புப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. கண் வார்டு, தோல் நோய் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட ரோட்டின் மேல் உள்ள மருத்துவப்பகுதி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக இப்பகுதிகளை இடிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.இந்நிலையில் நேற்று ஜைக்கா நிறுவனத்தின் தமிழக ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகளான, தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் கேப்டன் காமாட்சி ஆகியோர் காம்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டர் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து புதிய கட்டிடத்திற்காக இடிக்கப்பட உள்ள துறைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சிகிச்சை பாதிக்காமல் வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாக துறைத்தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், டீன் வனிதா தலைமையில் நடந்தது. மருத்துவக்கண்காணிப்பாளர் ராஜா, துறைத்தலைவர்கள் பிரேம்குமார் (மெடிசன்), தமோதரன் (சர்ஜரி), பாலசுப்பிரமணியன் (இருதய சிசிச்சை) கவிதா (கண் வார்டு) உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: